Skip to content
Home » இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Senthil

உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.நேர்த்தியான முறையில் வளைந்து பயிற்சி செய்வதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

ஜூன் மாதம் 21ந் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா சபையில் பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் முன்மொழிந்தார். இந்த கோரிக்கை அதே ஆண்டு டிசம்பர் மாதம் 11ந் தேதி ஐ.நா. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு 175 உறுப்புநாடுகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து 2015ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில் 9வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்னாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்றார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சென்னை மாமல்லபுரத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். லடாக்கில் உள்ள பங்கோங் டசோ ஆற்றின் அருகே பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

மத்தியபிரதேசத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், பல்வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ-மாணவியரும், பொதுமக்களும், திரைத்துறை பிரபலங்களும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் அமெரிக்க நேரப்படி இன்று  காலை 8 முதல் 9 மணி வரை சர்வதேச யோகா அமர்வு நடைபெறவுள்ளது. இதில், ஐ.நா.வின் உயர்நிலை அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உலகளாவிய புலம்பெயர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!