Skip to content
Home » ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

  • by Senthil

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன. 6-வது பட்டத்திற்கு குறி வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்து இருப்பதால் அவரது கேப்டன்ஷிப் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம்  ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மேக்ஸ்வெல், 2 மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள விராட் கோலி, கேப்டன் பிளிஸ்சிஸ், கேமரூன் கிரீன், ரஜத் படிதார் என்று அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்துவீச்சில் முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், ரீஸ் டாப்லே மிரட்டக்கூடியவர்கள்.

2008-ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடிக்க முடியாமல் தவிக்கும் பெங்களூரு அணி அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வரிந்து கட்டுகிறது.

இவ்விரு அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் சென்னையும், 10-ல் பெங்களூருவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கினாலும் அதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

மாலை 6.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா  நடத்தப்படுகிறது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ சினிமா செயலியிலும் போட்டியை பார்க்கலாம்.

ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு  பரிசுத் தொகை என்ன என்று  இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு கோப்பையை வென்ற சென்னை  அணி ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த அணி ரூ.13 கோடியும் பரிசாக பெற்றது. அதே தொகைத்தான் இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!