Skip to content
Home » ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

ஐபிஎல்…. சென்னையில் இன்று சிஎஸ்கே-ஐதராபாத் மோதல்

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.   இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.

சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானாவும் சென்னை அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.

மெதுவான தன்மை கொண்ட சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும். முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை அணி 226 ரன்கள் குவித்தும் 8 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பலவீனமாக இருந்தது. அந்த தவறை உடனே சரிசெய்ய வேண்டும்.

கால் பெருவிரவில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களில் ஆடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உடல் தகுதியை எட்டி பயிற்சியில் ஈடுபடுவதால் அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இது கூடுதல் வலுசேர்க்கும். கேப்டன் டோனி முட்டி வலியால் அவதிப்பட்டாலும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

உள்ளூர் ரசிகர்கள் முன்பு களம் இறங்குவதால் ‘ரிஸ்க்’ எடுக்க அவர் தயாராக உள்ளார். அவர் களம் இறங்குவதை சென்னை அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிமன்ஸ் நேற்று உறுதி செய்தார். ‘எப்போதும் போல் டோனி நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். அவர் இன்றையஆட்டத்தில் விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று தெரிவித்தார்.

மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் பணிந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை அதட்டியது. கடந்த லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் மயங்க் அகர்வால் (48 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (36 ரன்கள்), மார்க்ரம் (22 ரன்) ஆகியோர் மட்டுமே ஓரளவு பங்களித்தனர். ஐதராபாத்தை பொறுத்தமட்டில் நிலையற்ற பேட்டிங் அந்த அணிக்கு பாதகமாக உள்ளது. பெரிய அளவில் சோபிக்காத தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சொந்த ஊரில் ஜொலித்து தனது அணிக்கு பலம் சேர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தத்தில் 4-வது வெற்றியை பெற சென்னை அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணியும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் சென்னையும், 5-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

கடைசியாக மோதிய அந்த அணிக்கு எதிரான 5 ஆட்டங்களில் 4-ல் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!