Skip to content
Home » சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

  • by Senthil

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆமதாபாத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி, குஜராத்திடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி மோதும் 2வது போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.  சென்னை அணி, லக்னோ அணியுடன் மோதுகிறது.

2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம். சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாகும். இங்கு 56 ஆட்டங்களில் ஆடி 40-ல் வெற்றிகளை குவித்துள்ள சென்னை அணி இந்த சீசனில் இங்கிருந்து வெற்றிக்கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க வருகை தரும் ரசிகர்கள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணிக்க வழிவகை செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும், சென்னை சூப்பர் கிங்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்துக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் பார்கோடுகளை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஸ்கேன் செய்து இலவசமாக பயணிக்கலாம். இரவு நேர போட்டி நடக்கும் நாட்களில் மட்டும் மெட்ரோ ரெயில் சேவை 1½ மணி நேரம் நீட்டிக்கப்படும். அத்துடன் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு சிரமமின்றி செல்ல பேருந்து சேவையும் அளிக்கப்படுகிறது. மேலும் வடபழனி, சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெரிய திரைகளில் ஐ.பி.எல். போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!