இஸ்ரேல் : மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புக்கு இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, நபாதியே (Nabatieh) நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட தெற்கு லெபனானின் பல இடங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல் ராணுவம், தெற்கு லெபனானில் தங்கள் படைகள் மீது ஹெஸ்பொல்லா அமைப்பு 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவியதாகவும், அதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லாவின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் ஈரானின் உச்சத் தலைவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தொடங்கியதைத் தொடர்ந்து, லெபனானும் இந்த மோதலில் இழுக்கப்பட்டது. அதன் பின்னர் இரு தரப்புக்கும் இடையே கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா முன்னெடுத்துள்ள ஈரான் – இஸ்ரேல் அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக லெபனானிலும் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை இடம்பெற்றுள்ளது. இதனால் தற்போது நடைபெற்று வரும் தாக்குதல்கள் அந்த அமைதி ஒப்பந்தத்தை பாதிக்கக்கூடும் என்ற கவலை வாஷிங்டனில் எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஹெஸ்பொல்லா மூத்த தலைவர் ஹசன் ஃபத்லல்லா, “இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முழுமையாக மதிக்க வேண்டும். எங்கள் கிராமங்கள் மற்றும் பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது உள்நாட்டில் இருந்து ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தெற்கு லெபனானின் சில பகுதிகள் இன்னும் இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த மோதலால் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தெற்கு லெபனானின் பல கிராமங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் தாக்குதல்கள் தொடர்வது, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
