Skip to content
Home » காசா ஆஸ்பத்திரிக்கு எரிபொருள் அனுப்பிய இஸ்ரேல்….. ஏற்க மறுத்தது ஹமாஸ்

காசா ஆஸ்பத்திரிக்கு எரிபொருள் அனுப்பிய இஸ்ரேல்….. ஏற்க மறுத்தது ஹமாஸ்

  • by Senthil

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுடன் இஸ்ரேல் பேரம் பேசி வருவதாகத் தெரிகிறது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்பிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக அவர்களுடன் சில ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படலாம். ஆனால் அது என்ன மாதிரியான ஒப்பந்தம் என்பதை இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாது. அது திட்டத்தையே சிதைத்துவிடும். அதைப் பற்றி அதிகம் விவரம் தெரிவிக்காமல் இருப்பதே அது நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறை அதிகரிக்கும்” என்றார். அவருடைய இந்த சூசகப் பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 1400 பேர் இறந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மருத்துவமனைகள் மீதான தங்களது ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அழுத்தங்கள் குவிந்து வருகிறது.

 இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை அல் ஷிஃபா மருத்துவமனைக்கு 300 லிட்டர் எரிபொருளை வழங்கியதாகவும் ஆனால் அதனை ஏற்க ஹமாஸ் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களது படையினர் தங்களின் உயிரைப் பணையம் வைத்து அல் ஷிபா மருத்துவமனைக்கு 300 லிட்டர் எரிபொருளைக் கொண்டு சென்றனர். ஆனால் ஹமாஸ் முட்டுக்கட்டையால் அதனை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கடந்த சில வாரங்களாகவே காசாவில் உள்ள மருத்துவமனைகளில் எரிபொருள் இல்லை. உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்றெல்லாம் கூறி வருகின்றன. அப்படி இருக்கும்போது ஏன் இந்த எரிபொருளை ஏற்க மறுக்க வேண்டும்” என்று வினவியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!