Skip to content
Home » மே.இ.தீவு டெஸ்ட்……இந்தியா அபாரம்….. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்

மே.இ.தீவு டெஸ்ட்……இந்தியா அபாரம்….. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர்.வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீசின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். ரகீம் கார்ன்வால் 19 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இந்தியாவின் முதல் இன்னிங்சை கேப்டன் ரோகித் சர்மாவும், புதுமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இவர்கள் முதல் நாள் முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தனர். ரோகித் சர்மா 30 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 40 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ரோகித்தும், ஜெய்வாலும் தொடர்ந்து நிதானமாக ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு துரத்தியடித்தனர். 22 இன்னிங்சுக்கு பிறகு தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய ஜோடி என்ற சிறப்புடன் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர்.

எதிரணியின் ஸ்கோரை கடந்து முன்னிலையும் பெற்றனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா முதல்இன்னிங்சில் விக்கெட் இழக்காமல் முன்னிலை காண்பது இதுவே முதல் நிகழ்வாகும்.  அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டிலேயே சதம் விளாசி கவனத்தை ஈர்த்தார். மும்பையைச் சேர்ந்த 21 வயதான ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டிலேயே சதம் நொறுக்கிய 17-வது இந்தியர் என்ற மகத்தான சாதனை பட்டியலிலும் இணைந்தார். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 10 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 103 ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து இறங்கிய சுப்மன் கில் 5 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்ததாக ஜெய்ஸ்வாலுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை மெதுவாக உயர்த்தியது. 162 ரன்கள் முன்னிலை 113 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிகு 312 ரன்கள் சேர்த்து 162 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அப்போது ஜெய்ஸ்வால் 143 ரன்னுடனும் ( 350 பந்துகள், 14 பவுண்டரி), விராட் கோலி 36 ரன்னுடனும் ( 96 பந்து, 1 பவுண்டரி) ஆடிக்கொண்டிருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ஜோமல் வேரிக்கன் மற்றும் அதான்ஸே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று இரவு மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!