அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தோப்புத் தெரு கிராமம் விவசாயம் நிறைந்த பூமியாகும். ஊரின் விவசாயப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற
ஸ்ரீ பெரமனார் தெய்வம் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.
கடந்த 4 தலைமுறையாக கிராம மக்கள் வணங்கி வந்த இத்தெய்வத்திற்கு உருவமில்லை. ஈறுகுலி மரத்தையும், அதன் அடியில் கட்டப்பட்ட கல்லையும் வைத்து, அதுவே உருவமாக எண்ணி அதற்கு படையிலிட்டு, ஆண்டாண்டு காலமாக அக்கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். தங்கள் பகுதியில் விவசாயம் செழிப்பதற்கும், விவசாயிகளை பாதுகாக்கும் தெய்வமாக ஸ்ரீ பெரமனார் தெய்வம் விளங்குவதாக அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த நிலையில் அக்கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் செழிக்கவில்லை. அதேபோன்று பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்ததாக கருதப்பட்டது.


இதையடுத்து அக்கிராமத்தில் வசிக்கும் 5ம் தலைமுறை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மரத்தையும், கல்லையும் உருவமாக எண்ணி வழிபட்ட நம் முன்னோர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும், விவசாயத்தையும், மக்களையும் பாதுகாக்கும் தெய்வத்திற்கு உருவம் கொடுத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதன் பின்னர் ஸ்ரீ பெரமனார் சுவாமிக்கு உருவம் கொடுத்து, சிலை வடித்து, பாதுகாக்கும் தெய்வத்திற்கு ஒரு கையில் கதையும், மறு கையில் வாளையும் வைத்து சுமார் 6 அடி உயரம் உள்ள சிலையை வடிவமைத்தனர். பின்னர் ஸ்ரீ பெரமனார் தெய்வத்திற்கு கோவில் கட்டி கும்பம் வைத்தனர்.
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி திருப்பணிகளை முன்னின்று நடத்தி, கோவில் கட்டும் பணிகளை நிறைவு செய்தனர். பின்னர் புதிய கோவிலின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா விமர்சையாக இன்று நடத்தினர். கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி கோவில் விமானக் கலசத்திற்கு புனித நீரை ஊற்றி ஸ்ரீ பெரமனார் தெய்வத்திற்கு கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். திரளாக கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி தங்களது குல தெய்வத்தின் புதிய உருவத்தை வழிபட்டனர்.
கடந்த 4 தலைமுறையாக மரத்தையும், கல்லையும் தெய்வமாக வழிபட்டு வந்த முன்னோர்களின் கனவை நனவாக்கி, பல லட்சம் செலவு செய்து கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தி காட்டிய இளைஞர்களை சுற்று வட்டார கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.
