மேற்கு வங்கத்தில் மாத மின் கணக்கீடு, ஒரு லட்சம் பேருக்கு வேலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்திலும் தவெக அரசு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
மேற்கு வங்கத்தில் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மாதந்திர மின்பயன்பாடு கணக்கெடுப்பு, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 மாத உதவித் தொகை, ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை ஆகியத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதே வாக்குறுதிகளை ஆளும் த.வெ.க. அளித்திருந்த நிலையில், அவை எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கு வங்க அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கிய அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, இப்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் மின் கணக்கீடு வரும் ஜனவரி முதல் மாதம் ஒருமுறை நடத்தப்படும்; வேலையில்லா இளைஞர்களுக்கு 2027 ஜனவரி முதல் மாதம் ரூ.2000 வீதமும், 2028 ஜனவரி முதல் ரூ.3,000 வீதமும் உதவித்தொகை வழங்கப்படும்; ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர்களில் 11 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் எப்போதும் பாராட்டத்தக்கவை தான்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால், தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடுவது அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டால், இரு மாதங்களுக்கு 1000 யூனிட் பயன்படுத்தும் ஒரு குடும்பம், இப்போது செலுத்தும் ரூ.6,870 க்கு பதிலாக மாதம் ரூ. 1570 வீதம் இரு மாதங்களுக்கு ரூ.3,140 கட்டணம் செலுத்தினால் போதுமானது. இது இப்போதைய மின்கட்டணத்தை விட 54.29% குறைவு ஆகும்.
ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற த.வெ.க. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று கேட்கும் போதெல்லாம், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட பின்னர் மாதாந்திர மின்கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், மின்வாரியக் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 6 மாதங்களில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே பார்க்கப்படும்.
தவெக அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்காமல் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், அளித்த வாக்குறுதிகளை நியாயமான காலவரையறைக்கும் நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய வாக்குறுதிகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், அதே காலத்தில் ஆட்சிக்கு வந்த தவெக அரசும் அந்த 3 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
