பீகார் பெண்களின் கலாசாரத்தை இழிவுபடுத்திய நகைச்சுவை நடிகர் யாஷ் மகேஸ்வரி மன்னிப்பு கோரிய போதிலும், அவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் வலியுறுத்தியுள்ளனர். பாலிவுட் நகைச்சுவை நடிகர் யாஷ் மகேஸ்வரி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பீகார் மாநில பெண்கள் சிந்தூர் (நெற்றியில் வைக்கப்படும் குங்குமம்) வைக்கும் கலாசாரம் மற்றும் சத் பூஜை குறித்து ஆபாசமான வகையில் பேசியிருந்தார். பெண்களை இழிவுபடுத்தும் அவரது இந்த தரம் தாழ்ந்த நகைச்சுவைக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, யாஷ் மகேஸ்வரி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பகிரங்க மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பீகார் மக்களின் கலாசாரம் குறித்து அப்படி நான் பேசியிருக்க கூடாது. எந்தவொரு மத உணர்வுகளையோ அல்லது பண்டிகையையோ புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இந்த விவகாரத்தில் நான் செய்தது 100 சதவீதம் தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன். மனது புண்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், யாஷ் மகேஸ்வரியின் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், ‘பீகார் போலீசாரின் மவுனமே இத்தகைய நபர்கள் கலாசாரத்தை வெளிப்படையாக அவமதிக்க தைரியம் அளிக்கிறது’ என இணையவாசிகள் சாடியுள்ளனர். பொழுதுபோக்கு என்ற பெயரில் மாநிலத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
