Skip to content
Home » பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

தூங்கா நகரம்,  கோவில் நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்ற பல பெருமைகளுக்கு உரிய  மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான  சித்திரைத் திருவிழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி காலை வெகுவிமரிசையாக நடந்தது.

தொடர்ந்து 3-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடைபெற்றது. தேர்கள் நிலைக்கு வந்த பிறகு, அன்றைய தினம் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் ஒரே சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இந்த ஒரு நாளில் மட்டும்தான். எனவே இதை பக்தர்கள் குடும்பம்-குடும்பமாக கண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

நேற்று(4-ந்தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைந்தார். விடிய, விடிய அழகருக்கு அங்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருனார் காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவனி வந்தார். கோவிந்தா…கோவிந்தா… கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர்.பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில்  கள்ளழகர் இறங்கினார்.

முன்னதாக கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சர்க்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி வைகையில் எழுந்தருளும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.

அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி மதுரை வந்து சேர்ந்து வைகை ஆற்றில் இறங்குவதே ஐதீகம்.புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டு, பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கண்கொள்ளா காட்சியில் மதுரை மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!