Skip to content
Home » காமராஜர் பிறந்த நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

காமராஜர் பிறந்த நாள்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. காமராஜர் முதலமைச்சரானதும், ஜாதி மதம் வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி இலவசமாக்கப்பட்டது. சுமார் ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்பதை அறிந்து, பள்ளிகள் இல்லாத ஊர்களில் எல்லாம், பட்டித் தொட்டி எங்கும் பள்ளிகளை திறந்தார் காமராஜர். ஏழைக் குழந்தைகள் கல்வி பெற கையேந்தி பிச்சை எடுக்கவும் தயார், தான் படிக்க விட்டாலும், இந்த தேசம் படிக்க வேண்டும் என்றும் எந்த சொத்து இல்லாதவர்களுக்கு கல்வி என்ற சொத்தை பெற்று விட்டாலே வருமை தானாக ஒழிந்து விடும் என்பது காமராஜரின் எண்ணம். காமராஜர் அவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், பள்ளிக்கு செல்ல வில்லையா என்று கேட்டதற்கு, சாப்பாடு தருவீங்களா? என்ற பையனின் எதிர்கேள்வியை மனதில் கொண்டு போட்டார் ஒரு சட்டம். அதுதான் இலவச மதிய உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் வந்த பிறகு, இடைநிற்றல் குறைந்து, கல்வி கற்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தது.

கல்வியில் புரட்சி செய்த கர்மவீரர் காமராஜரின் அரும் பணி காலத்தால் மறக்க இயலாது. இப்படிப்பட்ட மாபெரும் தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் நேரு.. தலைசிறந்த தலைவர் காமராஜ் அவரின் புகழ் காலம் உள்ளவரை போற்றப்பட்டு கொண்டே இருக்கும். காமராஜர் பெயரை உச்சரிக்காமல் தமிழ்நாட்டில் என்றும் செல்ல முடியாது. கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் வாக்குகள் சேகரிக்க சென்றாலும் காமராஜர் ,அண்ணா, கலைஞர் ,இவர்களின் பெயர்கள் உச்சரித்தால் மட்டுமே வாக்குகள் கிடைக்கும். தமிழ்நாட்டை தலைசிறந்த நாடாக மாற்றிய பெருமை காமராஜர் ஒருவரே சேரும் என்றார். இதனைத் தொடர்ந்து இந்திய நாடார் பேரவை, வணிகர்கள் சங்கம் பேரவை, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில், தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!