Skip to content
Home » ரத்த கடிதத்திற்கு மரியாதையில்லாமல் போச்சே.. கரூர் காங்கிரஸ் அதிர்ச்சி..

ரத்த கடிதத்திற்கு மரியாதையில்லாமல் போச்சே.. கரூர் காங்கிரஸ் அதிர்ச்சி..

  • by Senthil

கடந்த பிப் 12ம் தேதி கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் தற்போதைய எம்.பி. ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என பலரும் வலியுறுத்தி பேசினர். அதிலும் ஹைலைட்டாக முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனிடம் க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் ‘கரூர் எம்.பி தொகுதியை கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கு பெற்றுத் தரவேண்டும். எம்.பி ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என மாநில தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதம் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தெரிவித்தார்.முன்னாள் மாவட்ட தலைவரும், ஏஐசிசி உறுப்பினருமான பேங்க் சுப்பிரமணியன் பேசும்போது, “எம்.பி. ஜோதிமணி சரிவர நடந்து கொள்ளாததாலும், மரியாதை கொடுக்காததாலும் கட்சியில் இருந்து பலர் விலகி விட்டனர். தான் என்ற அகம்பாவத்தில் கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது பலரிடம் பணம் வசூல் செய்துவிட்டு கட்சியினருக்கு தங்குவதற்குக் கூட இடம் ஏற்பாடு செய்யவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும்; அதற்கு அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம்” என்றார். இப்படியாக காங்கிரஸ் கட்சியில் ஜோதிமணிக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. அதேபோல் கரூர் கலெக்டருக்கு எதிராக ஆர்பாட்டம் என்கிற பெயரில் கலெக்டர் ஆபீசில் ஜோதிமணி தர்ணா நடத்தினார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலின் போது திமுக அலுவலகத்திற்கு வந்து உங்கள் வீட்டு விருந்துக்கா? வந்திருக்கிறேன் என கூறி திமுக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படியாக எம்பி ஜோதிமணி கடுமையாக நடந்துக்கொண்டதால் திமுகவினரும் அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தனர். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் எம்பி ஜோதிமணி கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!