1968 டிசம்பர் 25ம் தேதியை தமிழகத்தை சேர்ந்த யாரும் எளிதில் மறந்து விட முடியாது. ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டம், தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட தினம். கூலி உயர்வு கேட்டதற்காக விவசாய கூலி தொழிலாளர்களை பண்ணையார்கள் தங்கள் அடியாட்கள் மூலம் அடித்து சித்ரவதை செய்தனர். ஒருகட்டத்தில் துப்பாக்கியை காட்டி அடியாட்கள் மிரட்டினர். பயந்து போன தொழிலாளர்கள் அங்குள்ள ராமையன் என்பவரது குடிசை வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
கதவை பூட்டி தீவைத்து விட்டனர்பண்ணையார்கள். 1வயது குழந்தைகள் முதல் 70 வயது முதியவர் வரை 44 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 20 பேர் பெண்கள், 19 பேர் குழந்தைகள். ஒவ்வொரு ஆண்டும் இந்த டிசம்வர் 25ம் தேதியை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கீழவெண்மணி தியாகிகள் தினமாக அனுசரிக்கிறார்கள்.
இதற்காக சம்பவம் நடந்த இடத்தில் ஒரு நினைவு இல்லம் கட்டி உள்ளனர். அங்கு ஒரு நினைவு ஸ்தூபியும், அதில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நினைவேந்தலுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த நினைவிடம் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது.
இதற்கிடையே மன்னார்குடி பாரதி வித்யாலயாவில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹம்சிதா தனது பள்ளியில் நடந்த கலைநிகழ்ச்சியில் கீழவெண்மணி சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசினார். அது அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதைத்தொடர்ந்து கீழவெண்மணிக்கே சென்ற ஹம்சிதா தன்னை ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் போல கருதி கீழவெண்மணி சம்பவத்தை விளக்கினார். அப்போது, அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைத்தார். அதில் கீழவெண்மணி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்களுமே அஞ்சலி செலுத்துகிறார்கள். தமிழக அரசு சார்பிலும் இங்கு வந்து மலர்வளையம் வைத்து இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமு் ஆதரவு பெருகி வருகிறது.
இது குறித்து கீழவெண்மணி இடம் பெற்றுள்ள கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நாகை மாலியிடம் கேட்டபோது, இதுகுறித்து நாங்கள் அரசுக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அரசே முன்வந்து அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினால் நல்லது என்றார்.
சம்பவம் நடந்து பலதலைமுறை கடந்தாலும் ஜாலியன்வாலா போன்ற நிகழ்வு இங்கு நடைபெற்றது துயரமானது. பொதுவுடமை கட்சியின் ஈடுபாட்டால் நிகழ்வு அரசின் கவனத்தை பெறாமல் இருக்கலாம். நாகரீகம் வளர்ந்த நிலையில் இது போன்ற செயல்கள் மனிதகுலத்தின் அறியாமையை மக்களுக்கு சொல்கிறது. அந்த முயற்சியில் சிறுமியின் பங்களிப்பு பாராட்டதக்கது