Skip to content
Home » கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

  • by Senthil

கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 823 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தம் 1401 நியாய விலைக் கடைகள் உள்ளது. நெருக்கடி இல்லாமல் விண்ணப்பம் பெறுவதற்காக 2 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16 ம் தேதி வரையும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
நாளை முதல் குடும்பத்தலைவிகள் சிறப்பு முகாம்களுக்கு வருவதற்கான தேதி மற்றும் நேரம் குறித்து டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். முதல் இரண்டு நாட்களுக்கு 60 பேர் வீதமும், பின்னர் நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதமும் விபரங்கள் சேகரிக்கப்படும். இந்த விபரங்கள் மொபைல் செயலி மூலம் சேகரிக்கப்படும். மக்கள் யாரும் அவசரப்பட வேண்டாம். விண்ணப்பங்களை மக்கள் பூர்த்தி செய்து வர வேண்டும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு உதவ முகாமில் ஏற்பாடு செய்யப்படும். இம்முகாமிற்கு வரும் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விபரம், மின் கட்டண அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கொண்டு வர வேண்டும். ஆன்லைன் மூலம் சரிபார்ப்புகள் நடைபெறும். இம்முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கூடுதல் நாட்களும் வழங்கப்படும். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு வனத்துறையினர் உதவியுடன் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

குடும்ப அட்டை இல்லாதவர்கள் குறித்து தனியாக பதிவு செய்யப்பட்டு, இல்லாத ஆவணங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். அனைவரது விவரங்களையும் வாங்கிய பிறகு தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இது அரசின் திட்டத்தில் . எந்த கட்சியினருக்கும் இதில் எந்த ரோலும் இல்லை. தகுதியானவர்கள் விடுபடாமல் இருக்க ஏற்பாடு செய்யப்படும். கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆவின் அளித்துள்ள அறிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலுக்கு பிறகு ஆட்கள் பற்றாக்குறையால் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டது. அந்த பேருந்துகளை மீண்டும் இயக்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!