Skip to content
Home » சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Senthil

கொடூரமான கொரோனா தாக்குதலின்போது கடந்த 2021ல் திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. ஒருபக்கம் கஜானா காலி. சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்தது. இன்னொரு பக்கம் கொரோனாவால் தினமும்  பல்லாயிரகணக்கானோர் அரசு ஆஸ்பத்திரிகளில்  வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்துக்கு 2 பக்கம் அடி என்பது போல இருமுனை தாக்குதலுக்கு மத்தியில் பதவியேற்ற  முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 2 முறை வழங்கினார். ரேஷன் கடைகள் மூலம் இந்த பணம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டது.

இந்த பணத்தை கன்னியாகுமரி மாவட்டம் கீழகலுங்கடியை சேர்ந்த  89வயது மூதாட்டி வேலம்மாளும் பெற்றார். திமுக முதல்வர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்ட அந்த பணத்தையும், நிவாரண பொருட்களையும் பெற்ற வேலம்மாள் பணத்தையும், பையையும் கையில் வாங்கியதும் தன்னையும் அறியாமல் அவர் பொக்கை வாயுடன் சிரித்தார். அந்த சிரிப்பு அவரை பொறுத்தவரை அந்த காலகட்டத்தில் ஈடுஇணையற்ற மகிழ்ச்சியின் உச்சமாக இருந்தது.

இதை கவனித்த  பத்திரிகை புகைப்படகலைஞர்  ஜாக்சன் என்பவர்   அதை படம்பிடித்து வெளியிட்டார். வேலம்மாளின் அந்த சிரிப்பு படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த படத்தை ஜாக்சன்  முதல்வருக்கும் பிரேம் போட்டு கொடுத்தார்.

இந்த வேலம்மாள் பாட்டிக்கு உறவினர்கள் யாரும் கிடையாது.  உடல்நலம் குன்றியிருந்த 92 வயதான வேலம்மாள்  பாட்டி நேற்று இயற்கை எய்திவிட்டார். ஆனாலும் அவரது சிரிப்பு புகைப்படம் இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டே இருக்கிறது.

வேலம்மாள் மறைவு செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!