Skip to content
Home » லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த லியோ என்ற திரைப்படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தில், வன்முறை, சட்ட விரோத செயல்கள், கார், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீசாரின் உதவி இருந்தால் போதும் அனைத்து குற்றங்களையும் செய்ய முடியும் என்பன போன்ற காட்சிகள் மூலம் தவறாக வழிகாட்டுகின்றார். வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் எடுக்கிறார். இதனை தணிக்கை குழுவினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் லோகேஷ் கனகராஜுக்கு முறையான உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற வன்முறையை தூண்டும் காட்சிகளை எடுப்பதற்காக அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ‘எஸ்.ஜே. சூர்யாவின் நியூ திரைப்படம் இது போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டு இருக்கிறது’ என்று வாதிட்டார்.

அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இது விளம்பரத்திற்காக எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் தொடரப்பட்ட வழக்கு’ என்றார். இந்த வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன, அவை எந்தெந்த இடங்களில் உள்ளன என்பவை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பு விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரனையை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!