திருச்சி மாவட்டம் முசிறி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் உயிரிழந்தார். கணவர் மற்றும் கார் டிரைவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் கணேசன் (69). இவர் தனது மனைவி ராதிகாவுடன் (66) திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் திதி கொடுப்பதற்காக காரில் புறப்பட்டு வந்துள்ளார். காரை டிரைவர் கிருஷ்ணன் என்பவர் ஓட்டி உள்ளார். திருச்சி – நாமக்கல் சாலையில் முசிறி நகர பேருந்து நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரி மீது மோதியதில் அந்தரத்தில் பறந்து சென்று பள்ளமான பகுதியில் இருந்த வயலில் சென்று விழுந்துள்ளது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் படுகாயமடைந்த ராதிகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த டிரைவர் கிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கணவர் கணேசன் லேசான காயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
