கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவர் கடந்த 2018ம் ஆண்டு தருமபுரியை சேர்ந்த பவித்ரா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இமானுவேல் குடும்பத்துடன் கோவை பீளமேடு காந்திமாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் பவித்ரா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இமானுவேல் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில் வீட்டில் இருந்த பவித்ரா எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இமானுவேல் வீட்டிற்கு வந்தபோது பவித்ரா வாந்தி எடுப்பதை கண்டு விசாரித்துள்ளார். அப்போது, அவர் தான் எலி மருந்தை சாப்பிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இமானுவேல், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பவித்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமான 4 ஆண்டுகளில் பவித்ரா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.