2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன் 10 அணிகளும் விடுவிக்கும், தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிஎஸ்கே டோனி, பிரசாந்த் வீர், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி உள்பட 11 பேரை விடுவித்துள்ளது. கையிருப்பு ரூ.28.05 கோடியுடன் ஏலத்தில் களம் இறங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் போல்ட், தீபக் சாஹர், கேசவ் மகராஜ் உள்பட 13பேரை விடுவித்துள்ளது. மொத்தம் 32.60 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கிறது.
நடப்பு சாம்பியன் ஆர்சிபி ஜேக்கப் பெத்தேல், ரிச்சர்ட் கிளீசன் உள்பட 5பேரை விடுவித்து ரூ.14.15 கோடியை ஏலத்திற்காக கைவசம் வைத்துள்ளது. கேகேஆர் பதிரனா, முஸ்தபிசூர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ரகானே, ராகுல் திரிபாதி, உள்பட 12 பேரை கழற்றிவிட்டுள்ளது. அந்த அணியின் கைவசம் ரூ.41.65 கோடி இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டிராவிஸ் ஹெட், கமிந்து மெண்டிஸ், மதுஷங்கா, உனத்கட் உள்பட 10 பேரை விடுவித்து ரூ.35.15 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க், நிதிஷ் ரானா, அபிஷேக் போரல், பதும் நிசங்கா, கருண் நாயர் என 10 பேரை விடுவித்து ரூ.39.50 கோடியை ஏலத்திற்கு வைத்திருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஹெட்மியர், தேஷ்பாண்டே, ஆடம் மில்னே, உள்பட 9 பேரை கழற்றி விட்டுள்ளது. கைவசம் மினி ஏலத்திற்காக ரூ.27.05 கோடி வைத்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆவேஷ்கான், ஹசரங்கா, நோர்ஜே உள்பட 7பேரை விடுவித்து ரூ. 47.45 கோடியை ஏலத்திற்கு வைத்திருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் வதேரா, லாக்கி பெர்குசன் உள்பட 6 பேரை விடுவித்து ரூ.18.60 கோடியுடனும், குஜராத் டைட்டன்ஸ் ஷாருக்கான், இசாந்த் சர்மா, உள்பட 6 பேரை விடுவித்து ரூ.3.75 கோடியுடனும் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது.
10அணிகளும் சேர்த்து மொத்தம் 89 வீரர்களை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக மும்பை 13 பேரையும், குறைந்த பட்சமாக ஆர்சிபி 5பேரையும் கழற்றிவிட்டுள்ளன. அதிகபட்சமாக லக்னோ ரூ.47.45 கோடியுடனும், குறைந்த பட்சமாக குஜராத் ரூ.3.75 கோடியுடனும் மினி ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது. ஓய்வுஅறிவித்த டோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸி.யின் டிராவிஸ்ஹெட், ஸ்டார்க் ஆகியோர் பணி பளுவால் தொடரில் இருந்துவிலகுவதாக அறிவித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
