Skip to content
Home » மதுரை அதிமுக மாநாட்டு பணிகள் 90% நிறைவு

மதுரை அதிமுக மாநாட்டு பணிகள் 90% நிறைவு

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டின் முகப்பில் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. முகப்பு பகுதியில் சுமார் 51 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் தான் வருகிற 20-ந்தேதி காலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து மாநாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.

இதை தொடர்ந்து மாநாட்டில் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.

மாநாட்டு பணிகள்,  90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மேடை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநாட்டு அரங்கில் அமைய உள்ள புகைப்பட கண்காட்சி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!