Skip to content
Home » ம.பி……. 4 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எரிந்து சாம்பல்…. பஸ்சில் எடுத்து சென்றபோது தீவிபத்து

ம.பி……. 4 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எரிந்து சாம்பல்…. பஸ்சில் எடுத்து சென்றபோது தீவிபத்து

மக்களவைக்கான   3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு  நேற்று நடைபெற்றது. குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மராட்டியம் (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9),சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால் ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இரவு வரை நீடித்தது.

இதில் மத்திய பிரதேசத்தில் நேற்று 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.  பெதுல் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும்  ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஓட்டு எண்ணும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. பெதுல் தொகுதியில் ஒரு  வாக்குச்சாவடியில் இருந்து 4 வாக்குப்பதிவு எந்தி்ரங்கள் நேற்று இரவு  பஸ்சில் எடுத்துச்செல்லப்பட்டன.

பஸ் சிறிது தூரம் சென்றதும் அந்த பஸ் திடீரென தீப்பற்றிக்கொண்டது.  பஸ்சில் இருந்து போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கீழே குதித்து உயிர் தப்பினர். இந்த திடீர் தீ விபத்தில் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் எரிந்து  சாம்பலானது. 2 எந்திரங்களை அதிகாரிகள் மீட்டுவிட்டனர். அவை சேதமின்றி தப்பியது.

இதுபற்றி  பெதுல் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சூர்யவன்ஷி கூறும்போது,  பஸ் தீப்பிடித்தது குறித்தும், 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து போனது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்திவிட்டோம் என்றார்.

எரிந்துபோன 4 வாக்குப்பதிவு எந்திரங்கள், எந்தெந்த  வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டது என்பதையும் கலெக்டர் தெரிவித்து உள்ளார். எனவே அந்த 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!