Skip to content
Home » இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்து முடிந்தது.  பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 2 நாட்கள் கழித்து 30-ந் தேதி மீண்டும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜையை போன்றே மகர விளக்கு காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் இன்று (திங்கட்கிழமை) மாலையில் நடக்கிறது. இதனையொட்டி கடந்த 2 நாட்கள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி முன்னிலையில் சுத்திகிரியை பூஜை நடந்தது. முதல் நாளில் பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து புண்ணியாகம், ரக்சா கலச பூஜை, 2-வது நாளான நேற்று சது சுத்தி, தார, பஞ்சகம் பூஜையும் நடந்தது.

மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணத்தை தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துகிறார்கள்.

அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அந்த சமயத்தில் அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்புவார்கள்.மகர ஜோதி நாளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு முறையில் குறைந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 2 நாட்களுக்கு முன்பிருந்தே சபரிமலையின் நாலாபுறமும் ஆங்காங்கே கூடாரம் அமைத்து பக்தர்கள் தங்கி வருகின்றனர். அந்த வகையில் பெரியானை வட்டம், பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனர். எனவே லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண குவிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!