Skip to content
Home » மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

  • by Senthil

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மோசடியில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட செயலி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொல்கத்தா, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மகாதேவ் சூதாட்டச் செயலியால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம், பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பகிரப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்த விவகாரத்தில், செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதையடுத்து இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு, சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் ஆகியோரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது.

இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியின் இரண்டு முக்கிய உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால் (வயது 43), துபாயில் சிக்கியுள்ளார். இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீசின் அடிப்படையில் உள்ளூர் போலீசாரால் கடந்த வாரம் ரவி உப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ளார். ரவி உப்பாலை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகக் கூறப்படும் மகாதேவ் சூதாட்ட செயலி, கடந்த மாதம் சத்தீஷ்கரில் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஷ்கர் மாநிலத்தின் அப்போதைய முதல்-மந்திரி பூபேஷ் பாகெலுக்கு 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!