Skip to content
Home » மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

  • by Senthil

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை  கொண்டவர் முய்சு. அதே நேரம் சீனாவின் கைப்பாவையாக இவர் செயல்படுகிறார். இதனால்  முய்சுக்கு அந்த நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் நேற்று  முன்தினம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதிபர் முய்சு தலைமையிலான அரசில் புதிதாக நியமிக்கபட்டுள்ள 4 மந்திரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பு மோதலாக மாறியது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது. அப்போது, புதிதாக நியமிக்கப்பட்ட 4 மந்திரிகளுக்கு ஒப்புதல் அளிக்க முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் மந்திரிசபையில் 1 மந்திரியை மட்டும் சேர்க்க எதிர்க்கட்சி ஒப்புக்கொண்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. 80 உறுப்பினர்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 45 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மேலும், மாலத்தீவு ஜனநாயக கட்சியின் கூட்டணி கட்சியான ஜனநாயகவாதிகள் கட்சி 13 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதேவேளை, ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் 13 உறுப்பினர்களையும், அதன் கூட்டணி கட்சியான மாலத்தீவு முற்போக்கு கட்சி 2 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. ஜம்ஹுரி கட்சி, மாலத்தீவு வளர்ச்சி கூட்டணி கட்சிகள் தலா 2 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 3 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த முகமது அஸ்லாம் சபாநாயகராகவும், அகமது சலீம் துணை சபாநாயகராகவும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் எதிராக ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான மாலத்தீவு முற்போக்கு கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இந்த நடவடிக்கையையடுத்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 56 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றால் அதிபரை பதவிநீக்கம் செய்யும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி அதன் கூட்டணியில் உள்ள ஜனநாயகவாதிகள் கட்சியுடன் சேர்ந்து அதிபர் முய்சுவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்பட்சத்தில் முய்சு அதிபர் பதவில் இருந்து நீக்கப்பட்டு புதிய அதிபராக எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் மீண்டும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!