Skip to content
Home » இந்தாம்மா….. ஏய்ய்….. இனி கேட்கமுடியாது

இந்தாம்மா….. ஏய்ய்….. இனி கேட்கமுடியாது

தமிழ் திரை உலகில்  வேகமாக ஓங்கி வளர்ந்து வந்த நடிகர் ஜி. மாரிமுத்து (56) இன்று காலை   சென்னையில் உள்ள டப்பிங் தியேட்டரில்  டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.   அவரது உடலுக்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.

1967ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரி என்ற கிராமத்தில்  விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

இளமையிலேயே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருந்தார்.  சாதரண குடும்பத்தில் பிறப்பது தப்பல்ல. ஆனால் சாதாரணமானவனாவே சாவது  உன்தப்பு என்ற பழமொழிக்கு ஏற்ப   தன்னைத்தானே பட்டை தீட்டிக்கொண்டவர். அதனால்  திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரிடம் சொல்லாமல், அதே நேரத்தில் ஒரு துண்டு சீட்டு எழுதி வைத்து விட்டு   1990ல் சென்னைக்கு ஓடிவந்தவர்.

ஆரம்பத்தில் ஓட்டலில் வேலை பார்த்தார். அங்கிருந்து கொண்டே தனது லட்சிய வேட்டையை தொடங்கினார். அப்போது திரையுலகில் பிரபலமாக விளங்கிய  ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அரண்மனைக்கிளி,  எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களில் ராஜ்கிரணுடன் பணியாற்றினார்.  அப்போது தான் கவிஞர் வைரமுத்துடன் தொடர்பு ஏற்பட்டு, அவரிடம் உதவியாளராக இருந்து கொண்டே தனது  இலக்கை அடையும் பயணத்திலும் நடைபோட்டார்.

பின்னர் பிரபல இயக்குனர் மணி ரத்தினம், சீமான்,  வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.  சூர்யா வாலி படத்தை இயக்கும்போது  மாரிமுத்து உதவி இயக்குனராக இருந்தார். இதனால் அஜீத்துடன் இவருக்கு இன்று வரை நல்ல நட்பு இருந்து வந்தது.

2008ம் ஆண்டு மாரிமுத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். 2014ல் புலிவால் என்ற படத்தை இயக்கினர்.2010ல் யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார்.   தொடர்ந்து  பரியேறும் பெருமாள்,  கொம்பன்,உதயா,   கத்திசண்டை, நிமிர்ந்து நில், ஜெயிலர் உள்பட பல படங்களில் நடித்து வந்தார். கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து  வந்தார்.

முற்போக்கு சிந்தனையாளர், மூடபழக்கவழக்கங்களுக்கு எதிரானவர்.  சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்.  அனைத்து துறைகளைப்பற்றியும் தெளிவான  சிந்தனை உடையவர்.  எனவே இவர் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வாக இருக்கும்போது இவரது பேச்சை, கருத்துக்களை கேட்க எப்போதும் பலர் உடனிருப்பார்கள்.  அனைவரிடமும் குடும்ப பாசத்தோடு பழக கூடியவர்.

இந்த நிலையில் தான் இவர்  டிவி சீரியலிலும் கால் பதித்தார்.  அந்த  தொடரின் கதை பிடித்திருந்ததால் டிவி தொடருக்கு வந்ததாக கூறினார். சன் டிவியில் இரவில் ஒளிபரப்பாக எதிர்நீச்சல் என்ற தொடரில்  டிவி நடிகரானார். இந்த தொடரை இயக்கும் திருச்செல்வம் என்பவரும் இந்த தொடர் மூலம் இயக்குனரானார்.

இந்த தொடரின் ஆதிகுணசேகரன் என்ற பாத்திரத்தில்  மாரிமுத்து , 3தம்பிகள், ஒரு தங்கைக்கு அண்ணனாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் ஆணாதிக்கம் மிகுந்ததாக  உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்துக்கு உயிரூட்டியவர்  மாரிமுத்து தான்.  ஏம்மாமா…. ஏய்ய் , இந்தாம்மா…… ஏய்ய்  ……என  தனது மனைவி மற்றும் தம்பி மனைவிகளை நொடிக்கு நொடி அதட்டும்  உச்சரிப்பு அந்த தொடரை விறுவிறுப்பாக்கியது.இதனால் இந்தாம்மா ஏய்ய் என்ற தலைப்பிலேயே ஒரு பேட்டி  கடந்தவாரம் டிவியில் ஒளிபரப்பானது. இவரது நடிப்புக்காகவே அந்த தொடர்  மக்களிடம் வரவேற்பை பெற்றது.இதனால்

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு திரைத்துறையில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்த மாரிமுத்துவின் இந்தாம்மா  ஏய்ய் இன்றுடன் அடங்கி விட்டது.  அவரது உடல் சொந்த ஊரில் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.  மாரியமுத்துவின் மனைவி பெயர் பாக்கிய லட்சுமி,  இவரது மகன் அகிலன், மகள் ஐஸ்வர்யா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!