Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்- உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, TTV புகழாரம்!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் அவரது சமூகநீதிப் பணிகளையும் தியாகத்தையும் போற்றிப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

நாட்டுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடிய அவரது பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகநீதிக்கான பங்களிப்பைப் போற்றுவோம். சமத்துவச் சமுதாயத்தை அமைக்க உறுதியேற்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள செய்தியில், “சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது தியாகத்தைப் போற்றுவோம்.

அவர் கனவு கண்ட சாதியற்ற, சமத்துவமான சமூகத்தை உருவாக்கிட உறுதியேற்று, தொடர்ந்து பயணிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், “சாதியக் கொடுமைகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்தவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் சமூகநீதியையும் நிலைநாட்டத் தன் வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்த இம்மானுவேல் சேகரனாரின் தியாகத்தையும் சமூகநீதிக்கான அவரது போராட்டத்தையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பணிகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களையும் அரசியல் தலைவர்கள் தங்கள் பதிவுகள் மூலம் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!