Skip to content
Home » மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கடந்த 23ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களில் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமயமான பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று உத்ரகாண்ட், கர்நாடகா ஆந்திரா கோவா மற்றும் ஒடிசா மாநில கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். உத்ரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும் நாட்டுப்புற நடனங்களில் ஒன்றான சபேலி நடனம், கர்நாடகா மாநில கொடவ பெண்கள்

பாரம்பரிய உடை மற்றும் நகைகள் அணிந்து ஆடிய உம்மத்தட்டா நடனம், ஆந்திர மாநில கலைஞர்கள் தலையில் பித்தளை பாத்திரத்தை வைத்துக் கொண்டு கை-கால்களை வேகமாக அசைத்த போதும், தலையை அசைக்காமல் ஆடிய கரகாலு நடனத்தில் தலையில் 4 அடுக்கில் பாட்டில்களை நிலைநிறுத்தி மகுடி வாசிப்புக்கேற்ற வகையில் ஆடிய நடனம், கோவா மாநில கலைஞர்கள் சிக்மோ திருவிழாவின்போது ஆடும் சமை (விளக்கு) நடனம், ஒடிசா மாநில கலைஞர்கள் ஆடிய ஒடிசி கிளாசிக்கல் நடனத்தின் முன்னோடி நடனம் என கூறப்படும் கோட்டிபுவா நடனத்தில் பெண்வேடமிட்டு உடலை வில்லாக வளைத்து ஆடிய நடன நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் திரளான கலா ரசிகர்கள் பங்கேற்று நடனங்களை கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!