Skip to content
Home » நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

  • by Senthil

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த  ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது.  அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.  அணையில் திருப்திகரமாக தண்ணீர் இருந்து,  கர்நாடக அரசு தமிழக அரசுக்கு தரவேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரை மாத தவணையில் சரியாக கொடுத்தால்  குறுவையை தொடர்ந்து, சம்பா சாகுபடியும் செய்ய முடியும். இதன் மூலம் குறுவை 5 லட்சம் ஏக்கரிலும், சம்பா சுமார் 11 லட்சம் ஏக்கரிலும் சாகுபடி நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கர்நாடகத்தில்  தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்து உள்ளது என காரணம் காட்டி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்  கர்நாடகம் தண்ணீர் விட மறுத்துவிட்டது.  தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என  கர்நாடக கிரிக்கெட் வீரர்  கே. எல். ராகுல், நடிகர்கள்  சிவராஜ்குமார் உள்பட பலா், மற்றும் பாஜகவினர், கர்நாடக காங்கிரசார், மஜத கட்சியினர் என அனைத்து கன்னட அமைப்புகளும் தண்ணீர் தரமாட்டோம்  என கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஜூன் மாதம் முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை கர்நாடகம்  28 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது. அந்த காலகட்டத்திலேயே வழங்கப்பட வேண்டிய தண்ணீரில் 46.9 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் கர்நாடகம்  தமிழகத்துக்கு வழங்கமறுத்துவிட்டது.

இந்த நிலையில் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 30.90 அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. அதாவது 93.47 டிஎம்சி  கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி இருப்பு  வெறும் 8 டி.எம்.சி.யாக குறைந்துள்ளது.

இந்த தண்ணீரைக்கொண்டு  இனி  சம்பா சாகுபடி செய்ய முடியாது. எனவே  வரும் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்கு குடிநீர் தேவை மற்றும் அணையின் மீன் வளர்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 8 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில் இன்று காலை 6 மணிக்கு மேட்டூர் அணை மூடப்பட்டது.  டெல்டா மாவட்டங்களின் குடி நீர் தேவையை கருத்தில் கொண்டு 500 கனஅடி மட்டுமே அணையில் இருந்து  திறக்கப்படுகிறது.  இப்போதுள்ள 8 டிஎம்சி தண்ணீர்  இன்னும் 8 மாதங்களுக்கு போதுமானது அல்ல. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கி விட்டால் ஜனவரி வரை தண்ணீர் பிரச்னை இருக்காது.  வடகிழக்கு பருவமழை மூலம்  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகம் எதிர்பார்க்க முடியாது.  ஆனால் நிலத்தடி நீர்  ஆதாரம் பெருகும்.

எனவே  வழக்கம் போல மயிலாடுதுறை மாவட்டத்தில்  நிலத்தடி நீரைக்கொண்டு சம்பா சாகுபடி  பணியை தொடங்கி உள்ளனர். டெல்டாவின் மற்ற மாவட்டங்களில் பம்ப்செட் வசதி உள்ளவர்கள் மட்டுமே சம்பா சாகுபடி செய்யமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி 50% பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!