Skip to content
Home » சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி டி.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் பேசியதாவது:

கணபதி அக்ரஹாரம் சீனிவாசன்: டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மற்றும் நேரடி விதைப்பு நடைபெற்று உள்ளது. இதுவரையில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஓரளவிற்கு நெல் பயிர்கள் காப்பாற்றப்பட்டது. கடந்த 10 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பூக்கும் தருணத்தில் உள்ள பயிர்கள் வாடி வருகின்றன. மேலும் ஏரிகள், குளங்களில் தண்ணீர் குறைவாக உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. மேட்டூர் அணை எப்போதும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28 ம் தேதி மூடுவதுதான் வழக்கம். ஆனால் கடந்த 75 நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. நடப்பு நெல் பயிர்களை காப்பாற்றவும், ஏரி குளங்கள் நிரப்பவும் தொடர்ந்து 10 நாட்கள் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட கேட்டுக் கொள்கிறேன்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பயிரில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு முன்முனை மின்சாரம் தடை இல்லாமல் வழங்க வேண்டும். சம்பாவிற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

அம்மையகரம் ஏகேஆர். ரவிச்சந்தர்: பொங்கல் தொகுப்பு குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பில் செங்கரும்பு, தேங்காய், வெல்லம் மற்றும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, கண்டமங்கலம், வளப்பக்குடி கிராமங்களில் அதிக அளவு செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் இத்திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். புதிய ரேஷன் கார்டுக்காக ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடன் வழங்க வேண்டும்.

வாளமர்கோட்டை இளங்கோவன்: திருமலைசமுத்திரத்தில் உருவாக்கப்பட்ட மரங்களின் சரணாலயம் எனப்படும் விருட்சவனம் பராமரிப்பின்றி உள்ளது. இதில் 216 வகை மரங்கள் நடப்பட்டன இந்த விருட்சவனம் சுற்றுலாத்தலமாக விளங்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.

பாபநாசம் கே.எஸ்.முகமது இப்ராஹிம்: டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் தற்போது பூத்து கதிர் வரும் நிலையில் உள்ளது. ஆனால் தண்ணீர் இல்லாமல் காய்கிறது.  விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் ஆணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் மாவட்ட பொருளாளர் கே.பி.துரைராஜ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் எம்.பெரியசாமி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் சம்பா சாகுபடி பயிர்களை எடுத்து வந்து மாவட்ட கலெக்டரிடம காண்பித்தனர். தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு மூலம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!