Skip to content
Home » சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

  • by Senthil

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி  மேகலா தரப்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.  அவர் சட்ட விதிகளின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. ஒருவேளை கைது செய்வதற்காக சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் அதனை நீதிமன்றத்தால் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டத்தை இயற்ற முடியும். போலீஸ் காவல் கோருவதற்கான எந்த அதிகாரமும் அமலாக்கத்துறைக்கு கிடையாது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்து மறுநாள் கஸ்டடி கோருகிறார்கள்.அவர் வெளிநாட்டுக்கு செல்வார் என்ற அச்சமோ, பயமோ தேவையில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக விசாரணை என்ற பெயரில் வரவழைத்து, அதன் பின்னர் அவரை கைது செய்ய அமலாக்கத்துறை இது போன்ற செயலில் ஈடுபடுகிறது. தினமும் விசாரிங்க: 15 நாட்களுக்கு மேல் அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்க உரிமை இல்லை. நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவரை விசாரிக்கக்கூடாது என யாரும் சொல்லவில்லை. நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று விசாரிக்கலாம். இப்போதும் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் தான் செந்தில் பாலாஜி இருக்கிறார். அவரை தினமும் சிறிது நேரம் அமலாக்கத்துறை விசாரிக்கலாம். 15 நாட்களுக்குப் பிறகு போலீஸ் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நிச்சயம் உரிமை இல்லை. நடுவர் சட்டம், ஐ.டி சட்டம், பிஎம்எல்ஏ இப்படி பல சட்டங்களில் விதி விலக்கு உள்ளது. எனினும் ஒரு செயலில் ஒரு விலக்கையே பிரதானமாக முன்வைக்க முடியாது. ஒன்று இருக்கிறது, அல்லது இல்லை. அவ்வளவுதான். விதிவிலக்கை சட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. 15 நாட்களுக்குப் பிறகு போலீஸ் காவலில் இருக்கக் கூடாது என்று இன்று சட்டம் சொல்கிறது.” என வாதிட்டார். அப்போது நீதிபதி சுந்தரேஷ், 15 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் போலீஸ் காவல் வழங்கப்பட்டிருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முகுல் ரோத்தகி, “இது இந்திய ஹாக்கி அணி போன்றது. அவர்களால் சரியான நேரத்தில் கோல் அடிக்க முடிந்தால், அவர்களுக்கு ஸ்கோர் கிடைக்கும். ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டைட். ஒருவேளை 15 நாட்களுக்குள் எல்லாம் சரியாக இருந்திருந்தால் அமலாக்கத்துறை விசாரித்திருக்கலாம்” என்றார். இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது விரிவான வாதங்களை முன்வைப்பதற்கு நாளை ஒருமணி நேரம் அவகாசம் வேண்டும் என்று கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இடையீட்டு மனுதாரர்களுக்கும் நாளை தங்களது வாதத்தை முன்வைக்க அனுமதி அளித்தனர். மேலும், செந்தில் பாலாஜி வழக்கில் நாளைக்குள் இருதரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!