Skip to content
Home » மணியம்மையார் குறித்த பேச்சு…. அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

மணியம்மையார் குறித்த பேச்சு…. அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

வேலூரில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார், மணியம்மை குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.9.2023 அன்று வேலூரில் நடைபெற்ற கழகத்தின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில் நான் பேசும் போது, கழகத்திற்கும் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கும் இருந்த தொடர்புகளை குறித்து பேசிக் கொண்டு வரும்போது, திமுக தோன்றியதற்கே காரணம் வேலூர் மாநகரம் தான் .

வேலூருக்கு பிரசாரத்திற்கு வந்த தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையார் அவர்கள் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணியைப் பார்த்த தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையார் அவர்களை கழகப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார்.

எதிர் காலத்தில் கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்து விட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்து கொண்டார். இது பொருந்தா திருமணம் என்று அண்ணா அவர்கள் திராவிட கழகத்திலிருந்து வெளியேறினார். இது தான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம். இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், “அழைத்துக் கொண்டு போனார்” என்பதற்கும் “கூட்டிக் கொண்டு போனார்” என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நாள் உணர்கிறேன்.

என்னுடைய இந்த பேச்சு தமிழினத் தலைவர் அண்ணன் வீரமணி அவர்களுக்கும், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில் அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் இடத்திலும், ஆசிரியர் அண்ணன் வீரமணியார் இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை அண்ணன் வீரமணியார் அவர்களே அறிவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!