Skip to content
Home » நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

  • by Senthil

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று  புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் மீதும் தொடர்ந்து வெறுப்புணர்வை பரப்பிக் கொண்டிருக்கின்ற முதல் நபர் மரியாதைக்குரிய ஆளுநர்தான். எனவே, நாங்கள் எப்போதுமே ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பவில்லை.

இதை தொடங்கியது யார்? ஆளுநர்தான். ஊர் ஊருக்குச் சென்று பிரசாரம் செய்கிறார். ஒரு கட்சியினுடைய தலைவரைப் போல, எதிர்க்கட்சித் தலைவரைப் போல அவர்தான், பிரச்சாரங்கள் செய்கிறார். ஆனால் ஒன்று,

நாங்கள் ஆட்சி செய்கிற இந்த மாநிலத்திலேயே, பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இந்தநேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எல்லாம் வந்துவிட்டதாகக் கூறுவார்கள். எனவே, திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவத்துக்கு பொறுப்பல்ல.

இது ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்திருக்கிறோம். உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது  செய்திருக்கிறோம். அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்.

இதில் நாங்கள் எந்தவிதமான தவறும் செய்யவில்லை. எங்காவது மனநோயாளி ஒருவர் இதுபோல வீசி சென்றால், அதற்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியுமா?”

“ஆளுநர் மாளிகைக்கு எல்லாம் பாதுகாப்பு இல்லை என்று சொல்வதெல்லாம் தவறான ஒன்று. இந்த சம்பவம் வெளியே நடந்தது. சாலையில் செல்லும் ஒருவர் போகிறபோக்கில் இவ்வாறு தூக்கிப்போட்டுவிட்டு சென்றால், அதற்கு என்ன செய்ய முடியும்?. தமிழக முதல்வரின் ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு இல்லை என்று கூறுவது முழுக்க முழுக்க தவறான ஒன்று.

நாங்கள் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு கொடுக்காமல் வேறு என்ன செய்வோம்? அவர்கள் கூறுவது போல், அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர்தானே புகார் அளிப்பார்? நாங்கள் ஏன் அவ்வாறு செய்யப்போகிறோம்? சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாப்பதில், இந்த அரசு எந்த தவறையும் செய்யாது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிரியாக இருந்தாலும் அவரை பாதுகாக்கும் தலைவராகத்தான் இருப்பார்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!