Skip to content
Home » அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மரக்கடை , பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே இந்தியாவின் அடையாளமாக திகழ்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் பள்ளிவாசல், 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதை கண்டித்தும், ஆவணங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படாமல் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, தலைமை தாங்கினார். திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது வரவேற்புரை ஆற்றினார். இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கண்டன உரையை நிகழ்த்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை எம்எல்ஏ அப்துல் சமது சந்தித்து பேசினார்.

இந்தியாவில் தேச பிதா காந்தியடிகளின் படுகொலைக்கு பிறகு, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத செயல் பாபர்

மசூதி இடிப்பு என்பது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ஆம் தேதியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வருடம் தோறும் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரளால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி வழக்கு மிக மோசமான அநீதியாக தீர்ப்பு அமைந்த போதிலும், இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முஸ்லிம் சமுதாய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1991-ல் வழிபாட்டு தலங்களின் சிறப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் கூறுவது என்னவென்றால் 1947 ,ஆகஸ்ட் 15 நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வழிபாட்டுத் தலங்களில் எப்படி இருக்கிறதோ அதேபோன்று அனைத்து மத வழிபாட்டு தளங்களும் செயல்பட வேண்டும் அதில் எந்தவிதமான சர்ச்சையையும் உருவாக்க கூடாது என்பதாகும்.

ஆனால் இந்த சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வன்முறைகளும் முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது. ஆகையால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!