சைக்கிளில் சென்ற சிறுவனை வழிமறித்து செல்போன் பறிப்பு– வாலிபர் உட்பட 2 பேர் கைது
திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது 15 வயது மகன் கடந்த 4-ந் தேதி சைக்கிளில் ஜி கார்னர் மைதானம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அந்த சிறுவனின் தந்தை தியாகராஜன் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 18) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருட்கள் திருட்டு
திருச்சி எடமலை பட்டிப்புதூர் ஆர்.சி.நகர் கிருஷ்ணவேணி தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி பச்சைக்கொடி (வயது 62). இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு லால்குடி நத்தமாடிபட்டி பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்றுள்ளார். பின்னர் கடந்த 4-ந் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து ரூபாய் 30,000 பணம், ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி காப்பர் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு- 2 பேர் கைது
திருச்சி செம்பட்டு கீழபுது தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 45). இவர் சிமெண்ட் குடோனில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளை விமான நிலையம் திருவளர்ச்சிபட்டி பகுதியில் உள்ள மணமகள் மன்றம் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 26) , திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்த இமானுவேல் ( 22 ) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் சென்னை பொன்னேரியை சேர்ந்தவர் ஹர்ஷா வயது 23. இவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி இவர் தனது இருசக்கர வாகனத்தை திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு வகுப்பிற்கு சென்றுள்ளார் பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்த அவர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோட்டை, பாலக்கரை, உறையூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த நவனீத் (32 ) , ஷாருக்கான் (26), சதீஷ்குமார் 38 ஆகியோரின் இருசக்கர வாகனங்களும் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயாரை அறிவாளால் வெட்டிய ரவுடி கைது
திருச்சி கருமண்டபம் நகரை சேர்ந்தவர் விஜி (வயது 49). இவரது மகன் ஹேமேஸ்வரன் 24 கடந்த 4-ந்தேதி தனது மனைவியுடன் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது தாயார் விஜி தடுத்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஹேமேஸ்வரன் விஜியை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவரது தாயார் விஜி கொடுத்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஹேமேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.