Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த மாமியார்: மருமகள் பலி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே புஞ்சை தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி(36). இவரது மனைவி சசிகலா (32), தம்பதியினர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் சசிகலா கர்ப்பமானார். ஆனால், வயிற்றில் குழந்தை உருவான நாளில் இருந்து எந்த டாக்டரையும் பார்க்காமலும், கர்ப்பிணிக்கு உரிய தடுப்பூசி போடாமலும் யூடியூப்பில் வரும் வீடியோவை பார்த்து இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க இவரது மாமியார் பழனியாத்தாள் (56) மற்றும் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு 40 வாரங்கள் ஆன நிலையில் கடந்த 24ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், சசிகலாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே இவரது மாமியார் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உள்ளது. குழந்தை பிரசவித்த சசிகலாவுக்கு அன்று காலை 8.30 மணி வரை நஞ்சுக்கொடி வெளியேறாததால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால், சசிகலாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றும் சரியாகாததால் பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, சசிகலா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

இதனால், வேறு வழியின்றி அன்று காலை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு சென்றனர். அங்கும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் டாக்டர்கள் சசிகலாவின் கர்ப்பப்பையை அகற்றினர். ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டதால் சுமார் 65 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. அதன் பிறகும் உடல்நிலை மோசமாக இருந்ததால் 25ம் தேதி மாலை 4.15 மணிக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் சசிகலா இன்று காலை 11 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

error: Content is protected !!