வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ளன. 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றும், நாளையும் பதவியேற்பு விழா நடக்கிறது. அதன்படி, மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கன்ராட் சங்மா தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது.
இதேபோல் நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது. பா.ஜ.க. கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக வளர்ச்சி கட்சி (என்.டி.பி.பி.) தலைவர் நெய்பியு ரியோ முதல்வராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவிலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
திரிபுரா மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடக்கிறது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார். முன்னதாக நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை நடைபெறும் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.