Skip to content
Home » நம்ம ஸ்கூல் திட்டம்…. ஒரே நாளில் 50 கோடி குவிந்தது….

நம்ம ஸ்கூல் திட்டம்…. ஒரே நாளில் 50 கோடி குவிந்தது….

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கூடங்களில் அனைவரின் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளியாக உயர்த்துவதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் தலைவராக தொழில் அதிபர் வேணு சீனிவாசன், தூதுவராக செஸ் விளையாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளை மேம்படுத்த பழைய மாணவர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் என சமூக அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்கள் ஆகியோரை இணைத்து அவர்கள் மூலம் சமூக பொறுப்புணர்வு நிதி என்னும் சி.எஸ்.ஆர். நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நபர்கள் தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு அனுமதித்துள்ளது. அதில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்தல், கம்ப்யூட்டர்கள் வாங்கி கொடுப்பது, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, பெஞ்ச், டெஸ்க், ஆய்வகங்கள் உருவாக்குதல், நூலகங்கள் ஏற்படுத்துதல், கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க முடியும். இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் https://nammaschool.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் இணைந்து பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கலாம். இது தொடர்பான தங்களது விருப்பங்களை தெரிவிக்கலாம். இதில் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடை கூட வெளிப்படைத்தன்மையுடன் பள்ளி வளர்ச்சிக்காக செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை வழங்கினார். இந்த திட்டத்துக்கு அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். நமது பள்ளிக்கூடங்களை மேம்படுத்த வாரி வாரி நிதி வழங்கிட வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பாக பெருந்தொகையை வழங்கினார்கள். மொத்தம் ரூ.50 கோடியே 69 லட்சத்துக்கான காசோலையை மேடையில் வைத்து 12 நிறுவனங்களின் அதிபர்கள் முதலமைச்சரிடம் வழங்கினார்கள்.

அசோக் லேலண்ட் – ரூ.19 கோடி கனரா வங்கி- ரூ.30 லட்சம் கேபிடல் லேண்ட்- ரூ.3 கோடியே 78 லட்சம் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ்- ரூ.25 லட்சம் ஹூடாய்- ரூ.2 கோடி ஐ.ஓ.சி.எல்.- ரூ.4 கோடியே 33 லட்சம் கொடாக் மகேந்திரா வங்கி- ரூ.1 கோடி எல்.அண்ட்.டி. நிறுவனம்- ரூ.11 கோடி பொன்பியூர் கெமிக்கல்ஸ்- ரூ.25 லட்சம் செயிண்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை- ரூ.2 கோடி டான்சி- ரூ.4 கோடி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்- ரூ.2.78 கோடி இதில் அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த ஏற்கனவே பல்வேறு பங்களிப்பு செய்த நடிகர் சிவக்குமார், தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, அஜம் இஸ்மாயில், முன்னாள் மாணவர் முத்தழகன், தன்னார்வலர்கள் தஸ்லீமா, ஊராட்சி மன்ற உறுப்பினர் நித்யா ஆகியோருக்கு ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் திட்ட லச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!