அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் சிலர் இன்று தவெக-வில் இன்று இணைந்த நிலையில், இந்த நிகழ்வின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா வழக்கம் போல் அதிமுக-வை கடுமையாக விமர்சித்து பேசினார்.
பேப்பரில் மட்டும் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒட்டு மொத்த அதிமுக மற்றும் தொண்டர்கள் தவெக-வில் தான் இருக்கிறார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலில் தவெக-வின் வெற்றி அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் கிடைத்திருக்காது. அந்த மரியாதையும் அன்பும் எங்களுக்கு இருக்கிறது என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தான்தோன்றித் தனமாக பேசுகிறார். அவருக்கு நாவடக்கம் வேண்டும். ஒரு கட்சியில் கூட நிலையாக இல்லாத அவர், தவெக-விற்கு முன் பல கட்சிகளை நாடினார். அதிமுக-விலும் கூட சேர முயன்றார், நாங்கள் சேர்த்து கொள்ளவில்லை. அதிமுக தொண்டன் வாக்களித்து தான் தவெக வெற்றி பெற்றுள்ளது என கூச்சமே இல்லாமல், வெட்கப்படாமல் ஆதவ் அர்ஜூனா கூறுகிறார்.
அதிமுக-வை பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை. இதோடு அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் முன்பே சென்று போராடும் சூழல் ஏற்படும். தற்போது கட்சி மாறி இருப்பவர்கள் எல்லாம் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள். தமக்கு அடையாளம் காண்பித்த இயக்கத்தை, சமூகத்தில் அந்தஸ்தை கொடுத்த இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை வரவேற்று உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வதோடு நீங்கள் நிறுத்தி கொள்ளுங்கள், உங்களுடைய லாட்டரி வேலை எல்லாம் இங்கு வைத்து கொள்ள வேண்டாம் என ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக சாடி உள்ளார்.
