தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்டக் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்கக் காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருள் வழக்குகளில் தீவிரக் கவனம் செலுத்தாதக் காவல் அதிகாரிகள் மீது துறைரீதியானக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டிஜிபி மற்றும் மாவட்டக் காவல் உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மேற்கு காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில் கைப்பற்றப்பட்டக் குட்கா தொடர்பான வழக்கினை ஆய்வு செய்த போது, காவல் ஆய்வாளர் சண்முகம் அவ்வழக்கினைச் சட்டம் மற்றும் நடைமுறைகளின்படி முறையாக விசாரிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பானப் புகார்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், ஆய்வாளர் சண்முகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் தஞ்சை மாவட்டக் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
