தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ரெஜி என்பவர் பஸ்சை இயக்கிய நிலையில், கண்ணன் என்பவர் கன்டக்டராக பணியில் இருந்துள்ளார். பஸ் கல்லிடைக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பைக்கில் வந்த 3 பேர் பஸ்சை வழிமறித்தனர். அவர்களில் 2 பேர் பேருந்தில் ஏறினர். இதனால் ஓட்டுநருக்கும், பைக்கில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து வீரவநல்லூர் பேருந்து நிறுத்தம் சென்றபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர், பேருந்து ஓட்டுநர் ரெஜியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதைத் தடுக்க வந்த நடத்துநர் கண்ணனையும் தாக்கியதால், அவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களை வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. காயம் அடைந்த ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை வெட்டிவிட்டு தப்பிய கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்தும், மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும், பாபநாசம் பணிமனையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.