2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹாரி கேன் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான தொடக்க லீக் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனக்கென புதிய இடத்தைப் பிடித்துள்ளார். இந்த சாதனை தற்போது உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குரோஷியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹாரி கேன் ஒரு பெனால்டி மற்றும் ஒரு ஹெடர் கோல் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த இரண்டு கோல்களின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்துக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கேரி லினேக்கரின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தற்போது உலகக் கோப்பை மேடையில் 10 கோல்கள் அடித்துள்ளனர்.
இதோடு மட்டும் அல்லாமல், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக பெனால்டி கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ஹாரி கேன் படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா முன்னாள் வீரர் கேப்ரியல் படிஸ்டுடா ஆகியோர் தலா 4 பெனால்டி கோல்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். தற்போது தனது 5வது உலகக் கோப்பை பெனால்டி கோலை பதிவு செய்துள்ள ஹாரி கேன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் டுசெல், ஹாரி கேனின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். “அவர் ஒரு முழுமையான வீரர், அணியின் உண்மையான தலைவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். தாக்குதலில் மட்டுமல்லாமல், தற்காப்பிலும் முக்கிய பங்களிப்பை வழங்கும் வீரராக கேன் திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
32 வயதான ஹாரி கேன் தற்போது தனது தொழில்முறை வாழ்க்கையின் உச்சத்தில் உள்ளார். பாயர்ன் மியூனிக் அணிக்காக கடந்த சீசனில் அபார கோல் வேட்டை நடத்திய அவர், அதே வேகத்தை உலகக் கோப்பையிலும் தொடர்கிறார். உலகக் கோப்பையை வெல்ல இது தான் இங்கிலாந்தின் சிறந்த வாய்ப்பு என்றும் கேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்திலேயே பல சாதனைகளை முறியடித்து வரும் ஹாரி கேன், இங்கிலாந்தை நீண்ட நாள் கனவான உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
