திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் கிடந்த கைப்பையில், பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரத்தில் கிடந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், பையைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது துணியில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், குழந்தையை சாலையோரத்தில் விட்டுச் சென்றது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முசிறி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
