உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருவதால், அவர்களின் மனநலன் மற்றும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மசோதா தற்போது செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செனட் சபையில் இதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டால், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தச் சட்டம் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
இந்தச் சட்டம் சமூக வலைதளங்களுக்கு மட்டுமின்றி, உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய வழிவகை செய்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இத்தகைய கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், சிறுவர்களின் நலன் கருதி இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கும் உலகின் இரண்டாவது நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

