Spread the love

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 22ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் 5-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள், பள்ளி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இந் நிலையில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் இன்று காலை அமைச்சர் செங்கோட்டையனுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பிரச்னைக்கு விரைவில் ஒரு நல்ல முடிவை அரசு அறிவிக்கும்” என்றார். 

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என ஜெயலலிதா கூறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா என ஆராயப்படும் என்றுதான்  கூறினார்.  மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர மத்திய அரசும் பிற மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தையே பின்பற்றுகின்றன. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இயலாது.  பணிக்கு செல்லாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நிதியில்லாமல் போகும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் நிதியை செலவிட்டு விட்டால் மக்கள் திட்டங்களுக்கு நிதியில்லாமல் போகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY