கோவை மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, கோவை மத்திய சிறைச்சாலையின் வரலாற்றுப் பெருமையைச் சுட்டிக்காட்டிய அவர், சுதந்திரப்

போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அடைக்கப்பட்டிருந்த சிறை இது என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், பொய் வழக்குகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தங்களைச் சிறையில் அடைத்ததாகக் குற்றம்சாட்டிய கார்த்திகா, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சிறையில்

தாங்களும் இருந்தது வாழ்நாள் பெருமை எனக் கூறினார்.தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், மற்ற கட்சியினர் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், மக்களிடம் வாக்கு கேட்பது வேட்பாளர்களின் உரிமை என்றார்.
தாங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களோ, போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு

கைதானவர்களோ அல்ல என்றும், மக்களுக்காகத் தொடர்ந்து போராடும் களப்பணியாளர்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியை நடத்தத் தெரியாமல், பழிவாங்கும்

நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.இறுதியாக, “நாட்டை நல்லவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கோமாளிகளிடம் இருந்து ஆட்சி மாறி, போராளிகளின் கைக்கு ஆட்சி வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என்று கார்த்திகா தெரிவித்தார்.
