Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருத்துவ சேவையாற்றிய செவிலியர் – மறைவுக்குப் பின் 6 பேருக்கு மறுவாழ்வு

மருத்துவ சேவையாற்றிய செவிலியர் – மறைவுக்குப் பின் 6 பேருக்கு மறுவாழ்வு

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் மணிபிரியா. வயது 29. இவரது கணவர் மணிகண்டன் வயது 29.

மருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த சுகாதார செவிலியராக மணிப்பிரியாவும், அதே மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக மணிகண்டனும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 6-ம் தேதி வழக்கம் போல இருவரும் அரியலூரில் இருந்து மருதூரை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, மணிப்பிரியா மயங்கி கீழே விழுந்ததாக கூறி மணிகண்டன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மணிபிரியாவை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதித்தபோது அவரது சிறு மூளையில் அடிபட்டிருந்தது மருத்துவ வல்லுனர்களால் கண்டறியப்பட்டது. இருந்த போதும் மருத்துவ குழு அவருக்கு உரிய சிகிச்சையை துரிதமாக அளித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் மணிப்பிரியாவின் உடல் உறுப்புகள் இயங்கிய நிலையிலும் அவரது மூளை இயங்க மறுத்து, மூளைச்சாவு அடைந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரன் தலைமையிலான மருத்துவக் குழு, மணிபிரியாவின் குடும்பத்தினரிடம் நிலையை எடுத்துக் கூறினர்.

அவர்களும் மணிப்பிரியாவின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதற்கான முடிவை தெரிவித்ததை அடுத்து, அரியலூர் ஆட்சியர் மிருணாளினி அவர்களது ஆலோசனையில் உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கான நடைமுறைகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரன் தலைமையிலான மருத்துவ குழு மேற்கொண்டது.

இன்று காலை மணிபிரியாவின் உடல் உறுப்புகளான 2 கண்கள், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், தோல்கள் உள்ளிட்டவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல் உறுப்பு தானமாக பெறப்பட்டது.

மணி பிரியாவின் இரு சிறுநீரகங்களில் 1 மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அதேபோன்று அவரது இரண்டு கண்களும், மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மணிப்பிரியாவின் கல்லீரல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பின்னர் மணி பிரியாவின் உடலை பிரேத பரிசோதனை நடைமுறை முடிந்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மணி பிரியாவின் உடலுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் ன, செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தலைக்கவசம் அணியாததாலேயே ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கூறிவரும் நிலையில், கணவனோடு பயணித்த செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தினாலும், தன் உடல் உறுப்புகள் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துச் சென்றுள்ளார் செவிலியரான மணிபிரியா.

தான் வாழும் நாட்களில் செவிலியராக எண்ணற்ற நோயாளிகளுக்கு மருத்துவ சேவை செய்த மணிப்பிரியா, மரணத்திற்கு பின்னும் ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்து சென்றுள்ளது, அரியலூர் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது உடல் உறுப்பு தான சிகிச்சை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு மூளை சாவடைந்த பாக்யராஜ் என்பவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட நிலையில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழு மேற்கொண்டுள்ள இரண்டாவது உடல் உறுப்பு தான சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வரலாற்றில் இந்த உடல் உறுப்பு தான சிகிச்சை என்பது மிகுந்த முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!