திருச்சியை சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க பெண்மணி மற்றும் அவரது கணவர் இருவரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஆவார்கள். கடந்த ஜூலை மாதம் 2-ந் தேதி மதியம் அந்த ஒய்வு பெற்ற பெண் அதிகாரி தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் மத்திய நிதி மந்திரி பேசியதாக ஒரு போலியான வீடியோ வந்துள்ளது. அதற்கிடையே இருந்த வீடியோவில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று இருந்துள்ளது. இதனை உண்மை என நம்பியவர் தனது வங்கி கணக்கு விவரங்களை அதில் பதிவிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட சிலர் தாங்கள் அரசு நிதி துறையில் இருந்து பேசுவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து மிகுந்த நம்பிக்கையில் முதலீடு செய்ய முன் வந்தார் பின்னர் தன்னுடைய
கணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ. 49 லட்சத்து 3 ஆயிரம் பணத்தை அந்த அடையாளம் தெரியாத நபர்களின் வங்கிகணக்கிற்கு வெவ்வேறு தவணைகளில் பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் சிறிதுநேரத்திற்குபிறகு தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பதற்காக முயற்சி செய்துள்ளார். அப்போது அதில் பணம் இல்லை என்று தெரிய வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண்மணி இதுகுறித்து ஆன்லைன் மூலம் திருச்சி மாநகர சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை திருட்டு வழக்கில் 2 பெண்கள் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் 43 வயது மதிக்கத்தக்க பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் இந்த பெண் தனது குழந்தைகளுடன் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த பெண்ணின் வீட்டிற்கு அப்பகுதியை சேர்ந்த 48 வயது மற்றும் 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தையல் வேலைக்காக அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது . இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23 -ம் தேதி அன்று இந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்த இரண்டு பேரும் பீரோவில் இருந்து 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு அந்த பெண் தனது பீரோவில் இருந்த நகைகளை சோதனை செய்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.
சூதாட்ட கும்பல் சுற்றி வளைப்பு- 12 பேர் கைது
திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடை அருகே பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவஇடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடத்திய செம்பட்டு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்( 35), காட்டூரை சேர்ந்த கலைச்செல்வன்( 32), முள்ளிப்பட்டியை சேர்ந்த துரைராஜ்( 45), அய்யன்புதூரைச் சேர்ந்த வீரமணி( 41), விஜய்( 27), கே. சாத்தனூர சேர்ந்த மணிகண்டன் (28), திருவெறும்பூரை சேர்ந்த ராம்குமார்( 37) விமான நிலைய பகுதியை சேர்ந்த விஸ்வேஷ் (30), குண்டூரை சேர்ந்த ஸ்ரீதர், கல்லணையை சேர்ந்த சூர்யா( 27), மோகன் (38), தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியை சேர்ந்த சதீஷ் (44) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய கார்டுகள், ரூ. 68,250, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
