‘ராமாயணம்’ திரைப்படத்தில் இதிகாசம் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், பழங்கால இந்திய இதிகாசத்தைத் தழுவி 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தின் முதல் பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இதில் ராமராக நடிகர் ரன்பீர் கபூர், சீதையாக நடிகை சாய் பல்லவி, ராவணனாக யஷ், லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் இந்து இதிகாசத்தைத் திரித்துக் கூறுவதாகவும், இது இளைய தலைமுறையினரைத் தவறாக வழிநடத்தும் எனவும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நேற்று முறையிட்டார். இந்த முறையீட்டைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. படைப்பாளிகள் தங்கள் பார்வையில் இதிகாசத்தை வழங்க உரிமை உண்டு எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்தனர்.
அப்போது, ‘இந்தத் திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டது; பார்க்க விரும்பியவர்கள் அதைப் பார்த்துவிட்டார்கள். அவர்கள் தங்களுக்குப் புரிந்தபடி படம் எடுத்துள்ளனர். நீங்கள் விரும்பியபடி மற்றொரு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள். இதிகாசம் குறித்து மாற்றுக் கருத்து இருந்தால், அதை மையப்படுத்தி நீங்களே ஒரு படம் எடுங்கள்’ எனத் தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து, திரைப்படத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
