Skip to content
Home » ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடவு செய்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றி வருகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடு துறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 32 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

குறுவை சாகுபடி இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் இருந்து பாசனத்துக்காக ஜூன் மாதம் 16ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போது 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. அதன் பின்னர் போதிய அளவு மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படாததாலும் தொடர்ந்து மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதையடுத்து ஆறுகளில் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கல்லணைக் கால்வாயில் தற்போது 1,500 கன அடி வீதம் தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கல்லணைக் கால்வாயில் உள்ள பல்வேறு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் உரிய முறையில் பாசனத்துக்கு செல்வதில்லை.

இதனால் கல்லணைக் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் நடவு செய்யப்பட்டு உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவு குறுவை நெற்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து நட்ட பயிர்கள் கருகி வருவதை கண்டு கலங்கிய விவசாயிகள் குடத்தில் தண்ணீரை பிடித்து வந்து நெல் வயல்களில் ஊற்றி வருகிறார்கள். இதனால் கருகி வரும் பயிர்களை ஓரளவு காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இவ்வாறு தண்ணீரை ஊற்றி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!